surjith

மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ என்பவர் கட்டிட தொழிலாளியின் 2 வயது மகன் சுர்ஜித் வில்சன் நேற்று விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டான்.

தற்போது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 4 பொக்லைன் உள்ளிட்ட 5 எந்திரங்கள் மூலம் 15 அடி வரை குழி தோண்டப்பட்டு நேற்று இரவு முழுவதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆழ்துளை கிணற்றில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், குழிக்குள் சிசிடிவி கேமாராவை பொருத்தி சிறுவனை கண்காணித்தும் வருகின்றனர்.

ஆனால், குழந்தையை மீட்க முடியவில்லை. எனவே, அதன்பின் ஐஐடி குழுவின் நவீன கருவி ஆழ்துளை கிணற்றில் செலுத்தும் பணி தொடங்கியது. அதன்பின் இறுதிக் கட்ட முயற்சியாக மெட்ரோ இரயில்வே நிர்வாகத்திடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறுபுறம் சிறுவன் சுஜித்தை மீட்க நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் பணிபுரியும் மீட்புக் குழு அதிநவீன கருவிகளுடன் மணப்பாறைக்கு விரைந்துள்ளது.

இந்நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் ‘ நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் பணிபுரியும் மீட்புக் குழு மற்றும் தனியார் அமைப்பு இணைந்து ஆழ்துளை கிணற்றின் அருகில் போர்வெல் அமைக்கும் கருவி மூலம் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். ஒன்றரை மணி நேரத்தில் 80 அடி குழி தோண்டி பக்கவாட்டில் இருந்து குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறுவன் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதே எல்லோரின் பிரார்த்தனையாக இருக்கிறது.