surjith

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட குழந்தை சர்ஜித் 67 மணி நேரமாகியும் இன்னும் மீட்கப்படாமலே இருப்பது தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் கடந்த 25ம் தேதி மாலை 5.30 மணியளவில் 2 வயது சர்ஜித் தவறி விழுந்துவிட்டான். பல்வேறு முயற்சிகள் செய்தும் தோல்வியில் முடிந்து தற்போது கிணற்றுக்கு அருகே 100 அடி குழி தோண்டி பக்கவாட்டில் சுரங்கம் அமைத்து சிறுவனை மேலே தூக்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 40 அடி மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. முழுவது தோண்ட இன்னும் 12 மணி நேரமாகும் என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், டிரில்லிங் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. எனவே, அதை சரி செய்யும் முயற்சியில் பலரும் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தை சர்ஜித் தற்போது 88 அடி ஆழத்தில் சிக்கியுள்ளான். எனவே, அதற்கு கீழ் அவன் செல்லாதவாறு ஏர்லாக் மூலம் குழந்தையின் கை பிடிக்கப்பட்டுள்ளது. பள்ளம் தோண்டும் போது கடினமான பாறைகள் இருப்பதால் எந்திரம் அடிக்கடி பழுதாகி விடுகிறது. போதாக்குறைக்கு அவ்வப்போது லேசான மழையும் பெய்து வருகிறது. எனவே, மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் சிறுவன் சர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் பிரார்த்தனையும், விஷேச பூஜைகளும் நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் பலரும் #Prayforsurjith என்கிற ஹேஷ்டேக் மூலம் இந்த விவகாரம் பற்றி பேசி வருகின்றனர்.