Rs.2000 for those below the poverty line
Rs.2000 for those below the poverty line

சென்னை: வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் 60 லட்சம் பேருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.2,000 சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து, ஊரக மற்றும் நகர்ப்புற வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கான சிறப்பு நிதி உதவி வழங்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்தது.

மேலும் இப்பணிகளை கண்காணிக்க மாவட்ட அளவில் 7 பேர் கொண்ட குழுவும், சென்னை மாநகராட்சியில், சென்னை மாநகராட்சி ஆணையரை தலைவராக கொண்ட 7 பேர் குழுவும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ரூ.2,000 சிறப்பு நிதி பெற தகுதியான பயனாளிகளிடமிருந்து வங்கி கணக்கு, வங்கி ஐஎப்எஸ்சி குறியீடு எண், பொது விநியோக குடும்ப அட்டை எண், ஆதார் எண், குடும்ப தலைவரின் தொழில் போன்ற விவரங்கள் சேகரிக்கும் பணியில் உள்ளாட்சி துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த பணியின் போது, 15 ஆண்டுக்கு முந்தைய ஆய்வை பயன்படுத்தியதால் 50 சதவீத பயனாளிகளை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. எனவே சேகரிக்கப்பட்ட பயனாளிகளின் தகவல்களை மீண்டும் சரிபார்க்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, 40 சதவீத பயனாளிகளை கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி துறை பணியாளர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இந்த பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது., இதன் முடிவில் பட்டியல் இறுதி செய்யப்பட்டு முதல்வரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் முதல்வர் அனுமதி அளித்தவுடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நிதி செலுத்தப்படும் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.