Rohit and Dhawan – ரோகித்தும், நானும் சேர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளோம். நெருக்கடியான நேரங்களில் அச்சம் இல்லமால் இருப்போம். பொறுமையாக ரன்கள் சேர்ப்போம்,” என ஷிகர் தவான் தெரிவித்தார்.

இந்திய அணியின் தொடக்க இணை ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான். கடந்த 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருவரும் இணைந்து விளையாட தொடங்கினர்.

கடந்த ஆறு ஆண்டுகளில் ஒருநாள், ‘டி-20’ அரங்கில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது உலகின் அஞ்சத்தக்க துவக்க ஜோடியாக வளர்ந்து உள்ளனர்.

வரும் ஐ.பி.எல்., மற்றும் உலக கோப்பை பற்றி ஷிகர் தவான் கூறியது: சென்ற ஆண்டு எனக்கு சிறப்பாக இருந்தது. சர்வதேச ‘டி-20’ போட்டியில் அதிக ரன் எடுத்தேன்.

ஒரு சில ஏமாற்றங்கள் இருந்தாலும் இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சித்து வருகிறேன். ஐ.பி.எல்., தொடரை பொறுத்தவரையில் நீண்ட ஆண்டுக்குப் பின் எங்கள் டில்லி அணிக்கு திரும்பியுள்ளேன். 21 வயதில் இந்த அணியில் தற்போது 33 வயதில் மீண்டும் சேர்த்து உள்ளேன்.

அது மட்டும் அல்லாமல் இடைப்பட்ட காலத்தில் அதிக பாடம் கற்றேன். இந்த அனுபவத்துடன் டில்லியில் களமிறங்குகிறேன்.

மேலும், இந்திய அணியில் நானும், ரோகித் சர்மாவும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறோம். இதற்கு முக்கிய காரணம் தோனி. இவ்விஷயத்தில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

தற்போது இருவரும் சீரான ரன் குவிப்பை வெளிப்படுத்தி, உலகின் சிறந்த துவக்க ஜோடி வரிசையில் இணைந்தது மகிழ்ச்சி தருகிறது.

தற்போது ‘சீனியர்’ என்பதால் எங்களுக்கு பொறுப்புகள் அதிகரித்துள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி செயல்பட வேண்டும், எப்போது ‘ரிஸ்க்’ எடுப்பது, எப்படி அதை தவிர்ப்பது என எல்லாம் அத்துபடி.

ரோகித் 201, நான் 123 போட்டிகள் விளையாடி விட்டோம். இதனால் நெருக்கடியான நேரங்களில் பயந்து விட மாட்டோம். பொறுமையாக செயல்பட்டு நேரம் வரும் வரை காத்திருந்து ரன்கள் சேர்க்க முயற்சிப்போம்.

தற்போது உலக கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறேன். அடுத்து வரும் ஐந்து வார காலம் கூடுதலான பயிற்சியில் ஈடுபடப் போகிறேன்.

இதனால் புத்துணர்ச்சியுடன் களமிறங்க முடியும். ‘மினி’ உலக கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இதற்கு முன் இங்கிலாந்தில் வென்றுள்ளோம்.

இதுபோல இம்முறையும் சாதிக்க முடியும் என நம்புகிறேன். உலக கோப்பை கைப்பற்றுவதற்கான எங்கள் பாதையில் தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வோம்.