புரெவி புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் - தமிழக முதல்வர் அறிவிப்பு | Puravi Cyclone

‘புரெவி’ புயல் மற்றும் கன மழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இப்புயல் மற்றும் கன மழை காரணமாக 37 பசு மாடுகள், 4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள் மற்றும் 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், எருது ஒன்றுக்கு 25,000 ரூபாயும், கன்று ஒன்றுக்கு 16,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.‘புரெவி’ புயல் காரணமாக 75 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1,725 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 8 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 410 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

‘புரெவி’ புயல் காரணமாக, சாலைகளில் 66 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை மின் ரம்பங்கள் மூலம் வெட்டி, போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. ‘புரெவி’ புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 27 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. மின் வயர்கள் சேதமடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்து விழுந்ததனால் சேதமடைந்த மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை சீர் செய்யும் வகையில் மரங்களை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில், பொது மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் 34 மருத்துவ முகாம்களும், 43 நடமாடும் மருத்துவக்குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது வரை சுமார் 13,556 நபர்கள் இம்மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர். தேவையான மருந்துகள் மற்றும் கிருமி நாசினிகள் கையிருப்பில் வைக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பன்முக நடவடிக்கைகளை மாண்புமிகு அம்மாவின் அரசு மேற்கொண்டு வருகிறது.

“புரெவி‛ புயலால் ஏற்பட்ட பயிர் சேதாரத்தை முறையாக கணக்கீடு செய்து, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இது மட்டுமின்றி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத் தரவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.