PT Selvakumar Awareness Program in Chennai

கலப்பை மக்கள் இயக்கம் பிடி செல்வகுமார் அவர்கள் காற்று மாசுபாட்டை குறைக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளார்.

PT Selvakumar Awareness Program in Chennai : தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பிடி செல்வகுமார். இவர் கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் மூலமாக தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கான உதவிகளை செய்து வருகிறார். சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினம் என்பதால் காற்று மாசுபாட்டை குறைக்க மக்கள் சைக்கிளை பயன்படுத்த முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வடபழனி முதல் கோயம்பேடு மார்க்கெட் வரை தனது தலைமையில் இருசக்கர மற்றும் 3 சக்கர மெகா சைக்கிள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், மாணவர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்திய பிடி செல்வகுமார் பேசியதாவது, இன்றைய சூழ்நிலையில் காற்று மாசுபாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 16 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். ஆகவே ஒரு வீட்டில் 5 பேர் இருக்கிறோம் என்றால் 5 பைக் வைத்திருப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்.

இந்த நிலை மாறி சைக்கிளை பயன்படுத்த முன்வர வேண்டும். இதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியும், காற்றை தூய்மையாக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் சைக்கிளை பயன்படுத்துவதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் எனவும் பேசியுள்ளார். இதனால் அடுத்த தலைமுறைக்கு சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் சிகரெட், பீடி உள்ளிட்டவைகளை கல்லூரி வளாகங்கள, பொது இடங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்வோர் மீதும் அதனை பயன்படுத்துவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பொது இடங்களில் பீடி, சிகரெட் உள்ளிட்டவைகளை பிடிப்பதால் அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாமல் அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க துணைத் தலைவர் நந்தகுமார், ஒருங்கிணைப்பாளர் வி. கே வெங்கடேசன், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருமான எஸ் எஸ் குமரன், கடலூரைச் சேர்ந்த நடிகரும் தயாரிப்பாளருமான செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் பிடி செல்வகுமார் இந்த விழிப்புணர்வு பேரணியை டி. இராஜேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேசி வருகின்றனர்.