Pongal Gift Distribution in TamilNadu

தமிழகம் முழுவதும் இன்று முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களுக்கான பணத்தை வாங்கிச் செல்கின்றனர்.

Pongal Gift Distribution in TamilNadu : கடந்த ஆண்டு கொரோனோவால் நாடு முழுவதும் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தது. பொது முடக்கத்தால் பலரும் வேலை இழந்த நிலையில், நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு ஆறு மாதங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் செய்திடாத உதவிகளை மக்களுக்கு செய்தது.

இந்நிலையில், தமிழர்களின் சிறப்பு பண்டிகையான தைத் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்சியுடன் கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ருபாய் 2, 500 ரொக்கம் மற்றும் சிறப்பு பரிசு தொகுப்பாக அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் முழு கரும்பு ஆகியவற்றை அரசே வழங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் அறிவித்திருந்தார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் இந்த பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு இன்று தொடங்கியுள்ளது. அரிசி அட்டைதாரர்கள் அனைவரும் இந்த பரிசை பெற்று கொள்ளலாம் என்று கூறியிருந்த நிலையில், மக்கள் வரிசையில் காத்திருந்து பொங்கல் தொகுப்பை வாங்கி சென்றனர். முன் கூட்டியே டோக்கன் சரியான முறையில் வழங்கப்பட்டதால், எந்தவிதமான இடையூறும் இல்லாமல் பொது மக்கள் பொருட்களை வாங்கி செல்ல ஏதுவாக உள்ளது.

பொருளாதார பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த பொங்கல் பண்டிகை தித்திப்பாக அமைய வேண்டும் என பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரொக்கம் ரூபாய் 2,500 வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நிதி நெருக்கடி காலத்திலும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் 1000 ரூபாயிலிருந்து 2, 500 ரூபாயாக உயர்த்தி வழங்கிய முதலமைச்சருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கி செல்லும் மக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னரும் கூட, விடுபட்டவர்கள் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.