Lok Sabha Elections
Lok Sabha Elections

Lok Sabha Elections – சென்னை: வரும் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பிப்ரவரி 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வருகிற மார்ச் மாதம் முதல் வாரம் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

தேர்தலுக்கான கூட்டணி குறித்து அனைத்துக்கட்சிகளும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை அதிகபட்சம் 2 கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒன்று திமுக, மற்றொன்று அதிமுக. ‘திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ்,மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகளோடு கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என கூறப்படுகிறது.

அதிமுக பொறுத்தவரையில், நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக அதிமுக – பாஜ கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று ஒரு பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இருப்பினும், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணி உறுதியானாலும், அதிக சீட்டில் யார் போட்டியிடுவது, யார் தலைமை வகிப்பது என்பது போன்ற சிக்கல் நீடித்து வருகிறது.

அதிலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கருதும் தொகுதிகளை பாஜ கேட்பதால், அவர்களுடன் கூட்டணியே வேண்டாம் என்று தொடர்ந்து முன்னணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.,

இந்நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பிப்ரவரி 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

மேலும் ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.