Kolkata team win
Kolkata team win

Kolkata team win – ஐபிஎல் 2019 சீசனின் 6-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர்.

அணியின் எண்ணிக்கை 34 ஆக இருக்கும்போது கிறிஸ் லின் 10 ரன்னில் அவுட்டானார்.

அவரை தொடர்ந்து சுனில் நரேன் 9 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய ராபின் உத்தப்பாவும், நிதிஷ் ரானாவும் அடித்து ஆடினர். இருவரும் 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர்.

அதிரடியாக ஆடிய நிதிஷ் ரானா 34 பந்துகளில் 7 சிக்சர், 2 பவுண்டரியுடன் 63 ரன்னில் வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 146 ரன்னாக இருந்தது.

மறுபுறம் ஆடிய ராபின் உத்தப்பாவும் அரை சதமடித்து அசத்தினார். அவருக்கு ஆண்ட்ரு ரசல் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

அவர் அதிரடியாக ஆடி 17 பந்தில் 5 சிக்சரும், 3 பவுண்டரியும் அடித்து 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 218 ரன்களை எடுத்துள்ளது.

ராபின் உத்தப்பா 67 ரன்களும், தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஈடன் கார்டன் மைதானத்தில் அடிக்கப்பட்ட மிகவும் அதிகமான ரன்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அணி சார்பில் மொகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஹார்டஸ் வில்ஜோன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும், கேஎல் ராகுலும் களம் இறங்கினர். 5 பந்தை சந்தித்த ராகுல் 1 ரன் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த மயாங்க் அகர்வால் கெயிலுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில் ரஸல் வீசிய ஓவரில் கெயில் 20 ரன் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

பின்னர் வந்த சர்பிராஸ் 13 ரன்னில் வெளியேறினார். ஒரு பக்கம் வீக்கெட்டுகள் சரிந்தாலும் மயாங்க் அகவர்வால் அரை சதம் அடித்து வெளியேறினார். அடுத்ததாக வந்த டேவிட் மில்லறும், மந்தீப் சிங்கும் பொறுப்புடன் ஆடி ரன்கள் சேர்த்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணியால் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டேவிட் மில்லர் 59 ரன்னுடனும் மந்தீப் சிங் 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.