kamal

சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் ரூ.10 கோடி வாங்கவில்லை என கமல்ஹாசன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஸ்டுடியோ கிரீன்ஸ் ஞான்வேல்ராஜா சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் ஆகிய இரண்டும் இணைந்து தயாரித்த உத்தமவில்லன் திரைப்படத்தின் ரிலீஸின் போது ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக கமல்ஹாசன் தன்னிடம் ரூ.10 கோடி கடன் வாங்கியதாகவும், பல ஆண்டுகளாகியும் பணத்தையும் திருப்பி தரவில்லை என அவர் அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த புகாரை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பகா ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

உத்தம வில்லன் திரைப்படம் வெளியான நேரத்தில் திரு. ஞானவேல்ராஜா அவர்கள் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு பத்து கோடி ரூபாய் கொடுத்ததாக பரப்பப்படும் வதந்திகளை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் திட்டவட்டமாக மறுக்கிறது. உண்மைக்கு முற்றிலும் புறம்பான இவ்வதந்திகளை சொந்த காரணங்களுக்காக சிலர் பரப்புகின்றனர். திரு, ஞானவேல் ராஜா , திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு பணம் கொடுத்தார் என்பது அப்பட்டமான பொய். ஒரு ரூபாய் கூட அவர் கொடுக்கவில்லை என்பதே உண்மை. சுமார் பத்து நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தற்காலிக குழு உறுப்பினர் திரு. J.சதீஷ் குமார் அவர்கள், எங்கள் அலுவலகத்தை தொடர்புகொண்டார்.

uththama villain

திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா (பி) லிமிட்டெட் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், திரு. கமல் ஹாசன் அவர்களின் தேதிகள் தொடர்பாக எங்கள் நிறுவனம் அவர்களுக்கு 2015ல் அனுப்பிய கடிதம் ஒன்றின் தொடர்பாக பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 2015 மே மாதத்தில் திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா (பி) லிமிட்டெடுடன் கதை ஒன்று குறித்து ஆலோசனை செய்வதற்காக திரு.கமல்ஹாசன் அவர்களின் தேதிகளை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டெர்னேஷனல் நிறுவனம் கொடுத்திருந்தது. ஆனால் அது குறித்து திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா (பி) லிமிட்டெட் இன்று வரை எங்கள் நிறுவனத்தை மேலும் தொடர்பு கொள்ளவில்லை.

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுக்கும், திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா (பி) லிமிட்டெட்டுக்கும் இடையில் மட்டுமே உத்தம வில்லன் திரைப்படத்தை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. தங்கள் ஒப்பந்தத்தின் படி, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், உத்தம வில்லன் திரைப்படத்தின் முதல் பதிவை, திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா (பி) லிமிட்டெடிடம் ஒப்படைத்துவிட்டது. திரு. ஞானவேல் ராஜா அவர்களுக்கும், திரு. கமல் ஹாசன் அவர்களுக்கும் தனிப்பட்ட வகையில் எந்த விதமான ஒப்பந்தமும் கிடையாது.

எனவே, திரைப்படத்தை வெளியிடும் பொருட்டு, திரு. ஞானவேல் ராஜா அவர்கள் திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு பணம் கொடுத்தார் என்று கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை. திரு. கமல்ஹாசன் அவர்களின் மதிப்பைக் கெடுப்பதற்காகவே இவ்வதந்திகள் பரப்பப்படுகின்றன. திரு. கமல் ஹாசன் அவர்களின் மதிப்பை கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ள ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாராகி வருகிறது.

என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.