sucide

தான் செல்லமாக வளர்த்த நாயை வெளியேற்றி விட பெற்றோர் திட்டமிட்டதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சாமிசெட்டி பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவரின் மகள் கவிதா. இவர் பத்திரம் எழுதும் வேலை செய்து வருகிறார். இவர் 2 வருடங்களாக சீசர் என்ற நாய்க்குட்டியை வளர்த்து வந்தார்.

சீசருக்கு உணவு வைப்பது, குளிப்பாட்டி விடுவது என அனைத்தும் அவர் செய்து வந்ததால் சீசரும் அவருடன் அன்பாக பழகி வந்தது. வீட்டிற்கு கவிதா வரும் சப்தம் கேட்டாலே வீட்டின் கதவை தன் கால்களால் சீசர் சிராய்ப்பு செய்வதால் வீட்டின் கதவு அடிக்கடி பழுதாகியுள்ளது. எனவே, இந்த நாய் வேண்டாம் என பெருமாள் அடிக்கடி கவிதாவுடன் கூறி வந்துள்ளார். ஆனால், கவிதா கேட்கவில்லை. எனவே, தன் வீட்டிற்கு இரும்பு கதவை பெருமாள் பொறுத்தும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் தீபாவளியன்று பட்டாசு சத்தம் கேட்டு சீசன் குரைத்துக்கொண்டே இருந்துள்ளது. மேலும், இரவு நேரங்களில் கவிதாவை காண முடியாமல் சீசர் அடிக்கடி குரைத்துள்ளது. இதனால், அக்கம் பக்கத்தினர் பெருமாளிடம் நாய் கத்தும் சப்தம் தங்களுக்கு தொந்தரவாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சீசரை வீட்டை விட்டு வெளியேற்றிவிடலாம் என பெருமாள் கவிதாவுக்கு நிர்பந்தம் கொடுத்துள்ளார். இதனால், மனமுடைந்த கவிதா கடந்த 29ம் தேதி இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சீசரை பிரிய மனமின்றி தான் தற்கொலை முடிவை எடுத்ததாகவும், சீசரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறும் அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

தான் வளர்த்த செல்ல நாய்க்காக இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.