Former Election Commisioner Mr #TNSeshan no more
Former Election Commisioner Mr #TNSeshan no more

டெல்லி: இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் வயோதிகம் காரணமாக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் அல்லது டி. என். சேஷன் என்று நாடு முழுக்க அறியப்பட்ட டி.என்.சேஷன், இந்திய ஆட்சிப் பணி அலுவலராக இந்திய அரசின் பல்வேறு அரசுப் பொறுப்புக்களை வகித்து வந்தார். இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற, கண்டிப்புடன் இருந்த தேர்தல் ஆணையர் என்று பெயர் பெற்றவர் டி.என்.சேஷன்.

மேலும் 1990 முதல் 1996 வரை இந்தியாவின் 10-வது தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்தவர் டி.என். சேஷன் என்பது குறிப்பிடதக்கது. இவர் தேர்தல் அதிகாரியாக இருந்த காலக்கட்டத்தில் தான் வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் தேர்தல் ஆணையராக இருந்த போது, பல அதிரடியான நடவடிக்கைகளை கொண்டுவந்தார்.

இவர் தேர்தல் ஆணையர் பதவி மட்டுமின்றி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்துதுறை இயக்குநர் ஆகிய பதவிகளிலும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவர் தேர்தல் ஆணையராக இருந்து எடுத்த சில நடவடிக்கைகள் பலத்த விமர்சனத்துக்கு உள்ளான போதிலும் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு சீர்திருத்தங்களை செய்தார்.

டி.என். சேஷன் தேர்தல் ஆணையராக 6 வருடம் பணிபுரிந்தார். இந்த 6 வருடங்களில் தான், தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை முழுமையாகச் செயல்படுத்தத் தொடங்கியது.தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்ற நிலையை இவர்தான் கொண்டு வந்தார். இந்நிலையில் வயோதிகம் காரணமாக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் டி.என்.சேஷன் காலமானார்.

மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில், பாதுகாப்புத் துறை செயலராக இருந்த போது நாடு முழுவதும் இவர் பிரபலம் அடைந்தார். தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி அருகே பாதுகாப்புக்காகக் கூடுதல் பாதுகாப்புப் படைகளை இறக்கும் வழக்கத்தை இவர்தான் கொண்டு வந்தார். இவர் தேர்தல் ஆணையராக இருந்த போதுதான் தேர்தலில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்தது குறிப்பிடதக்கது.