எழுமின் விமர்சனம்
Ezhumin Review

எழுமின் விமர்சனம் :- “வையம் மீடியாஸ்” வி.பி.விஜி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், சின்ன கலைவாணர் விவேக் – தேவயானி ஜோடியுடன் பிரேம், அழகம்பெருமாள், ரிஷி, செல்’ முருகன்… உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் பிரவின், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா… ஆகிய லிட்டில் மாஸ்டர்ஸும் இணைந்து நடிக்க, சுவாமி விவேகானந்தரின் எழுச்சி வார்த்தையையே டைட்டிலாக கொண்டு சிறுவர், சிறுமியருக்கு தற்காப்பு கலைகளின் அவசியத்தை உணர்த்தும் விதமாக வெளிவந்திருக்கும் செம்மையான படம்தான் “எழுமின்”.

கதைப்படி, கோடீஸ்வர பிஸினஸ்மேன் விவேக் – தேவயானி ஜோடியின் ஒற்றை ஆண் வாரிசு மாஸ்டர் அர்ஜூன். குத்துச்சண்டை சாம்பியனான, அந்த சிறுவன் மீது ஏகப்பட்ட கனவுகளுடன் இருக்கின்றனர் விவேக் – தேவயானி தம்பதியினர்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஹார்ட் அட்டாக்கில், பெற்றோரின் கண் எதிரிலேயே குத்துசண்டை களத்தில் அகால மரணமடைகிறான் அர்ஜுன். இதில் இடிந்து போகும், விவேக் – தேவயானி தம்பதியினர் ஒரு வழியாக மனதை தேற்றிக் கொண்டு, தங்கள் பிள்ளையின் கனவான ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒன்றை ஆரம்பித்து, ஏழை சிறுவர் சிறுமியருக்கு செவ்வனே அவர்கள் விரும்பும் தற்காப்பு கலையில் பெரும் பயிற்சி அளித்து சாம்பியன் ஆக்குகின்றனர்.

இதில் பெரிதும் பாதிக்கப்படும் சுந்தரம் ஸ்போர்ட்ஸ் அக்காடமி ஒனர் அழகம்பெருமாள், விவேக் பயிற்சி மையத்தின் திறமையான குழந்தைகளை ஆள் வைத்து கடத்தி, தன் ஸ்போர்ட்ஸ் அகாடமி பிள்ளைகளை ஜெயிக்க வைக்கப் பார்க்கிறார்.

அழகம் பெருமாளின் கடத்தல் திட்டம் நிறைவேறியதா? குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த தற்காப்பு கலையால் தங்களை காத்துக் கொண்டனரா? அல்லது விவேக் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்டாரா…? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது “எழுமின்” படத்தின் மீதிக் கதையும், களமும்.

கதாநாயகர் கோடீஸ்வர பிஸினஸ்மேன் விஸ்வநாதனாக விவேக், நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்… என்று தான் சொல்ல வேண்டும். பிள்ளை மற்றும் தன் குடும்பத்தின் மீது அவர் வைத்திருக்கும் பாசம், நேசமெல்லாம் வெறும் வேஷமாகத் தெரியவில்லை. நிஜம் போன்றே இருப்பது இப்படத்திற்கு பெரிய பலம்.

Ezhumin Review
Ezhumin Review

அதிலும், குழந்தைகளுக்கு, “குட்ஹேபிட், பேட்ஹேபிட் குட் டச் பேட் டச் “சொல்லித் தரும் காலகட்டத்தில் இருக்கிறோம்… எனும் விவேக்கின் புலம்பல், இந்தப் படத்தில் ஏதோ இருக்கிறது என திரும்பி பார்க்க வைக்கிறது. கதையின் நாயகி பாரதியாக தேவயானி, ரொம்ப நாளைக்கு அப்புறம் பெரிய திரையில் தோன்றி பெரிய அளவில் நடித்திருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக பிரேம், பெரிதாக மிடுக்கு காட்டியிருக்கிறார். சுந்தரம் ஸ்போர்ட்ஸ் அக்காடமியின் தலைவராக அழகம் பெருமாள், வில்லன் ரிஷி எனும் ரிஷி, சதா சர்வ நேரமும் விவேக்குடன் வரும் ‘செல்’ முருகன்… உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் பிரவின், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா… ஆகிய லிட்டில் மாஸ்டர்களும் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

மிராகிள் மைக்கேல் ராஜின் சண்டை பயிற்சியில், சிறுவர்களின் சாகசங்களும், க்ளைமாக்ஸ் பைட்டும் கூடுதல் மிரட்டல். எஸ்.ராமின் கண்ணுக்குத் தெரியா கலை இயக்கம் கார்த்திக் ராமின் பக்கா படத்தொகுப்பு உள்ளிட்டவை ப்ளஸ் பாயிண்ட்ஸ்.

கணேஷ் சந்திரசேகரனின் இசையில் “மின்மினிக் கூட்டமே….”, “ஆராரராரோ…. ஆரிரிரோ எழடா எழடா….”, “காடாள முடியாதுடா… கற்றுக்குத் தடையேதுடா…” உள்ளிட்ட பாடல்களும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் பிரமாதம்.

வி.பி. விஜி இயக்கத்தில், “திருடன் கத்தி வச்சுக்காம கமர் கட்டா வச்சிருப்பான்?” எனும் காமெடி கடிகள் கொஞ்சம் படத்தின் வேகத்திற்கு தடை போட்டாலும், சில பல லாஜிக்குறைகள் ஆங்காங்கே தென்பட்டாலும், “விளையாட்டுல பாலிடிக்ஸ் இல்லாமலா? இப்போல்லாம் எல்லோரும் பாலிடிக்ஸையே விளையாட்டா எடுத்துக்கறாங்க…” உள்ளிட்ட வசனங்களும் ரசனை!

மேலும், சுவாமி விவேகானந்தரின் எழுச்சி வார்த்தைகளான, “எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை உழைமின்…” எனும் வார்த்தைகளை அழுத்தம், திருத்தமாக உரக்கக் கூறியிருக்கும் “எழுமின்” படத்தை, இக்கால சிறுவர், சிறுமியர் எல்லோரும் தவறாமல் பார்க்க வேண்டும். அவசியம் நம் தற்காப்பு கலைகளையும் கற்க வேண்டும்.

YouTube video

REVIEW OVERVIEW
ஆக மொத்தத்தில் "எழுமின்' - 'எழுச்சி! மகிழ்ச்சி!"
ezhumin-reviewஎழுமின் விமர்சனம் :- "வையம் மீடியாஸ்" வி.பி.விஜி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், சின்ன கலைவாணர் விவேக் – தேவயானி ஜோடியுடன் பிரேம், அழகம்பெருமாள், ரிஷி, செல்' முருகன்... உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் பிரவின், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா... ஆகிய லிட்டில் மாஸ்டர்ஸும் இணைந்து நடிக்க, சுவாமி விவேகானந்தரின் எழுச்சி வார்த்தையையே டைட்டிலாக கொண்டு சிறுவர், சிறுமியருக்கு தற்காப்பு கலைகளின்...