Doctors' struggle to accept CM's plea "temporarily withdrawn"!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் வேண்டுகோளை ஏற்று கடந்த 8 நாட்களாக மேற்கொண்டு வந்த போராட்டத்தை மருத்துவர்கள் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 18,070 அரசு டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அரசாணை 354ல் கூறியுள்ளபடி, ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் சில மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. இதனால் சில இடங்களில் உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் பரிதாபமாக இறந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில் ‘பணிக்கு திரும்பாதவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். மேலும் “இன்று காலைக்குள் பணிக்கு திரும்பாதவர்களின் பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும்., புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரசு டாக்டர்கள் போராட்டத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். உடனடியாக அவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய மருத்துவர்களை நியமிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை எச்சரிக்கை செய்தார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதால், தற்போது அங்கு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.