தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த துணை தலைவர்! – நடந்தது என்ன?

Chithambaram Village President Issues : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை ஊராட்சி உள்ளது. இதன் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி (37). இவர் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

இந்த நிலையில் துணைத் தலைவராக உள்ள மாற்றுச் சமூகத்தைச் சார்ந்த மோகன்ராஜான் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் அதே சமூகத்தில் உள்ள வார்டு உறுப்பினர் சுகந்தி ஆகிய இருவரையும், ஊராட்சி கூட்டங்களில் தரையில் அமர வேண்டும் எனவும், தேசியக்கொடி ஏற்றக் கூடாது எனவும் உத்தரவிட்டு ஊராட்சி நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஊராட்சி தலைவரை எந்தப் பணியும் செய்யவிடாமல் தடுத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

சாதி வெறியுடன், ஊராட்சி மன்றத் தலைவரை பணி செய்ய விடாமல் தொடர்ந்து இது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார் மாற்றுச்சமூகத்தைச் சேர்ந்த திமுக ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜன்.

இந்நிலையில் கடந்த ஜூலை 17ஆம் தேதி ஊராட்சிமன்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

Chidambaram Village President Issue

இந்த கூட்டத்தின் போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டு உள்ளார். அவர் ஆதிதிராவிடர் சமூகத்தினை சேர்ந்தவர் என்பதனால் இவ்வாறு அவமதிக்கப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் சமூகவலைதளங்களில் கூறப்பட்டு வந்தன. மேலும் இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

துணைத் தலைவராக இருந்து இந்தச் செயல்களைச் செய்தவர் திமுக கட்சியை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.

வெளியில் சமூக நீதி பேசும் திமுக பெண்ணடிமை தனத்தையும் சாதியையும் ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல இந்த சம்பவத்திற்காக திமுக தலைவர் ஸ்டாலின் எந்த எதிர்ப்புக் குரலும் கொடுக்காமல் இருக்கிறார் என்பது திமுக தொண்டர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.