Chennai Metro New Route Details

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில் வெளியிலிருந்து எப்படி பயணிக்கலாம் என்பது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம் வாங்க.

Chennai Metro New Route Details : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னையின் இரண்டாம்கட்ட மெட்ரோ திட்டத்தை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தை அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சென்னைக்கான பொது போக்குவரத்து மேலும் மேம்படுத்தப்படும்.

சென்னையில் தற்போது பிரதான போக்குவரத்து சேவையாக இருக்கும் மெட்ரோ இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த வழித்தடம் கோயம்பேடு போன்ற பகுதிகளில் மேம்பால முறையிலும் ஆயிரம் விளக்கு போன்ற இடங்களில் சுரங்க முறையிலும் அமைந்துள்ளது. இந்த முதல்கட்ட மெட்ரோ திட்டத்தின் மற்றொரு விரிவாக்கமாக வண்ணாரப்பேட்டை – விம்கோ வரையிலான வழித்தடங்கள் மக்கள் சேவைக்கு விரைவில் கொண்டு வரப்படும். லட்சுமி கோயில், சுங்கச்சாவடி, அஜாக்ஸ் போன்ற இடங்களில் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ள நிலையில் இதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட தொய்வினால் இந்த பணிகள் தாமதமாகி வருகிறது. தற்போது இருக்கும் மெட்ரோ சேவைக்கு மக்களிடத்தில் அதிக வரவேற்பு உள்ளதால் மெட்ரோ ரயில் நிறுவனமானது இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமாகியுள்ளது.

இரண்டாம் கட்ட வழித்தடங்கள்:

இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் 119 கி.மீ. தூரம் கொண்ட மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. இதில், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட்டிற்கும் , சோழிங்கநல்லூர் வரையிலும் என இரண்டு வழித்தடங்கள் அமையவுள்ளது. மேலும், பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் இடையே ஒரு வழித்தடம் அமைகிறது.

இதற்கான திட்ட மதிப்பீடு 80 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. மத்திய அரசின் பரிந்துரைப்படி மெட்ரோ திட்டத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு 60 ஆயிரம் கோடி ரூபாயில் திட்டத்தை செயல்படுத்த மெட்ரோ நிர்வாகம் பணிகளை செய்து வருகிறது. இதற்கான நிதியில் 60 சதவிகித நிதியானது ஜப்பான் பன்னாட்டு நிறுவனம் மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனமிடமிருந்து பெறப்படும், மத்திய, மாநில அரசுகளிடமிருந்து தலா 20 சதவிகித நிதி பெறப்படும்.

இதில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் இடையிலான வழித்தடத்தில் மாதவரம் – கோயம்பேடு மற்றும் மாதவரம் – சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்கள் முன்னுரிமை கொண்ட முக்கிய வழித்தடமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று முடிக்கும் தருவாயில் உள்ளது.

புதிய மெட்ரோ பணிமனைகள்:

இரண்டாம் கட்ட மெட்ரோ சேவைக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மெட்ரோ நிர்வாகம் மும்முரமாய் ஈடுபட்டுள்ளது. முதற்கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் இல்லாமல் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அளவில் சிறியதாகவும் அதிநவீன வசதிகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வடசென்னை – தென்சென்னை வரையிலான போக்குவரத்து நெரிசலின்றி அமையும்.

கோயம்பேட்டில் ஏற்கனவே இருக்கும் மெட்ரோ ரயில் பணிமனைபோல் இரண்டாம்கட்ட மெட்ரோ திட்டத்திற்கு மாதவரம், சிறுசேரி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்கப்படவுள்ளன.

அடிக்கல் நாட்டு விழா:

சென்னையின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் பொது போக்குவரத்தாக மெட்ரோ அமையப்போகிறது. இதில் மற்றுமொரு முன்னேற்றமாக இந்த திட்டம் மாநில அரசின் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாக முடிவுகளை விரைந்து எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இது உதவும். மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டம் அதே போன்ற வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் வளர்ச்சியில் மற்றுமொரு மைல்கல்லாக இருக்கும் இந்த திட்டத்தை அமித்ஷா இன்று அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.

“இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித்தட விவரங்கள்”

முதல் வழித்தடம் :

மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையில் 48 கி.மீ. நீளம் கொண்ட வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த வழித்தடத்தில் மூலக்கடை, கே.எம்.சி, அடையாறு, திருவான்மியூர், சத்தியபாமா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 50 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன.

இரண்டாம் வழித்தடம் :

கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான இரண்டாம் கட்ட வழித்தடத்தில் நந்தனம், கோடம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. இந்த வழித்தடம் 26.1 கி.மீ. தூரம் கொண்டது.

மூன்றாம் வழித்தடம் :

மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையில் அமைய உள்ள 47 கி.மீ. நீள வழித்தடத்தில் நெற்குன்றம், வளசரவாக்கம், ஸ்டெர்லிங் ரோடு உள்ளிட்ட 46 நிலையங்கள் வர உள்ளன.

சென்னையின் தென்பகுதி புறநகர்களான தாம்பரம், வண்டலூர் பகுதிகளை சேர்ந்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது, விமான நிலையம் – கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ திட்டம். மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆர்வம் கொண்ட மக்கள் தற்போது விமான நிலையம் முதலே மெட்ரோவில் பயணிக்க முடியும். ஆனால், கிளாம்பாக்கம், வண்டலூரில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையம் அருகே மெட்ரோ நிலையம் அமைக்கப்பட்டால் மக்களுக்கு மெட்ரோ சேவை சுலபமாய் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் நிறைவுபெற்று, மத்திய அரசின் நிதி வழங்குவது குறித்த முடிவிற்காக காத்திருக்கிறது.

நிம்மதியாய் குடியேறலாம்:

சென்னையில் மெட்ரோ அறிமுகமான அதற்கு பிறகு பொது போக்குவரத்து மேலும் வளர்ச்சி அடைந்தது. மக்களும் வீடு வாங்குவதற்கு மெட்ரோ வழித்தடத்தை ஒட்டிய பகுதிகளையே விரும்புகின்றனர்.

பல நிறுவனங்களும் மெட்ரோ பகுதிகள் அருகிலேயே புதிய இடங்களை தேர்வு செய்கின்றன. இதன் மூலம் பல தொழில் வளர்ச்சிக்கு மெட்ரோ முக்கிய ஆதாரமாக உள்ளது. வேலை மற்றும் கல்வி சார் விஷயங்களுக்காக சென்னை வருவோரும் இனி கவலை கொள்ளவேண்டாம். ஆயிரம் விளக்கில் வேலை கிடைத்தால் அப்பகுதியிலேயே வீடு தேட இனி அவசியம் இல்லை. திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் வீடு கிடைத்தாலும் குடியேறலாம். ஏனெனில், மெட்ரோ ரயில் மூலம் அதிகபட்ச தூரத்தையும் ஒரு மணிநேரத்தில் சென்று சேரலாம். விமான நிலையம், கோயம்பேடு போன்ற பயண முனையங்களுக்கும் மாவட்டத்தின் எந்த மூலையில் இருந்தும் சுலபமாக செல்லலாம்.

கட்டுமானத்திற்கான ஆயத்தங்கள்:

மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் சர்வதேச முறையில் ஒப்பந்தம் பெறப்பட்டு, நிறுவனங்களை தேர்வு செய்வர். முதல் கட்ட திட்டம் போன்றே இதற்கும் நிறுவனம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. மற்ற துறைகளை விட மெட்ரோ கட்டுமானத்திற்கு பல பெரிய நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இதற்கு காரணம் கொரோனா பொதுமுடக்கம் தான். பொது முடக்க தளர்வுகள் அடிப்படையில் மெட்ரோ கட்டுமான பணிகள் தொடங்கியிருப்பது, கட்டுமான துறைக்கான புதிய துவக்கமாகும்.

முதல் திட்ட பணிகள் போன்று இல்லாமல் இந்த முறை அதிக அளவு அரசு நிலங்களை பயன்படுத்த மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், சுரங்க மற்றும் உயர்மட்ட ரயில் நிலையங்கள் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் குறைந்த அளவு தனியார் நிலமே கையகப்படுத்தப்படும். இதனால், மக்களுக்கு இடர் இன்றி இந்த முறை மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.