Call Taxi Driver Jamuna

ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநளான இன்று அவருடைய புதிய படம் பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

Call Taxi Driver Jamuna : இயக்குநர்கள் நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கினாலும் , அதற்கு ஏற்ற நடிகர் நடிகைகள் கிடைத்தால் தான் அந்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டு பெற்று படமும் மிகப் பெரிய வெற்றி அடையும். தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கிட்டு, திரையில் உயிரூட்டி வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவருடைய திரையுலக பயணத்தைத் தொடக்கம் முதல் பார்த்தவர்கள், அவருடைய வெற்றிக்குப் பின்னால் எப்படியொரு கடின உழைப்பு மறைந்துள்ளது என்பதை அறிவார்கள்.

இன்று ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளாகும். அவருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், ரசிகர்களும் பிறந்த நாளுக்கான பிரத்தியேக போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுக் கொண்டாடி வருகிறார்கள். இந்த நாளில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை அறிவித்துள்ளார்கள்.

‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக,பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி மிகப் பெரும் பொருட்செலவில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழி களில் தயாரிக்கவுள்ளார் . இந்த படத்தின் கதையை கேட்ட உடனே, இப்படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.

‘டிரைவர் ஜமுனா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். கிரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார். அவருடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. வித்தியாசமான கதைகளம் என்பதால் நடிகர்கள் தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

இன்றைய கால கட்டத்தில், தினசரி வாழ்க்கையில்,கால் டாக்ஸி டிரைவர்களை கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து, பெண் கால் டாக்ஸி டிரைவரை, மையமாக கொண்ட கிரைம் திரில்லர் கதை என்பதை மட்டும் படக்குழு தெரிவித்து உள்ளதால், படத்திற்கு எதிர் பார்ப்பு எகிறி உள்ளது.