அனைவருக்கும் வீடு, அம்மா இல்லம் என மக்களை மகிழ்விக்கும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.

AIADMK Election Plans 2021 : குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு கிராமப்புறங்களில் அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும். நகர்ப்புறங்களில் வீடு இல்லாத மக்களுக்கு அரசே நிலம் வாங்கி அடுக்குமாடி குடியிருப்புக்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.

குல விளக்கு திட்டம் : குல விளக்கு திட்டம் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 1,500 ரூபாய் குடும்பத்தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பெண்கள் இல்லாத வீடுகளில் ஆண்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

தமிழர் பண்டிகையான பொங்கலுக்கு வழங்கப்பட்ட 2,500 ரூபாய் பொங்கல் பரிசு இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்.

நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு, 50 % கட்டணச் சலுகை வழங்கப்படும்.

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்பொதுவிநியோக திட்டத்தின் கீழ், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே நேரடியாக வழங்கப்படும்.

அனைத்து குடும்பத்திற்கு வருடத்திற்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.

விவசாயிகளை ஊக்குவிக்கவும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 7,500 ரூபாய் உழவு மானியம் வழங்கப்படும்.

சமூக ஓய்வூதிய திட்டம் மூலம் ஆண் வாரிசுகளால் புறக்கணிக்கப்பட்ட முதியோர்கள், விதவைப்பெண்கள், முதிர்க்கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தவரின் சமூக பாதுகாப்பிற்கு வழங்கப்படும் 1,000 ரூபாய் உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி 2,000 ரூபாயாக வழங்கப்படும்.

திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், ஏழை தம்பதிகளுக்கு அழகிய பட்டாடை, வெள்ளிக்கொலுசு, வீட்டு உபயோகப்பொருட்கள் உட்பட திருமண தம்பதிகளுக்கு அம்மா சீர்வரிசை வழங்கப்படும்.

அனைவருக்கும் இலவச அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும்.

மஞ்சள், வெங்காயம், மரவள்ளிக்கிழங்கு, அரிசி, கரும்பு, வாழை, சிறுதானியங்கள் உள்ளிட்ட முக்கிய விளைபொருட்களுக்கு குறைந்தப்பட்ட ஆதார விலை MSP தமிழக அரசால் வழங்கப்படும்.

9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் இனி செயல்படுத்தப்படும்.

தனியார் பங்களிப்புடன் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு, செயல்பட்டு வரும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தி செயல்படுத்தப்படும்.

அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என அனைத்து மாணாக்கர்களுக்கும் தினமும் 200 மிலி பால்/ பால் பவுடர் வழங்கப்படும்.

ஏழை, எளிய மக்கள் அதிக வட்டியில், தனியாரிடம் கடன் வாங்கி சிரமப்படுவதை தவிர்க்க, சுலபத்தவணையில் திருப்பி செலுத்தும் வகையில், வட்டியில்லா கடனுதவி -அம்மா பேங்கிங் கார்டு மூலம் வழங்கப்படும். இது வங்கியுடன் இணைக்கப்படும் என பல வகையான திட்டங்களை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.