2323 Beginning
மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதை சொல்லும் படமாக ‘2323 The beginning ‘உருவாகிறது.

மூன்று நூற்றாண்டுகளில் நடக்கும் கதைப் பின்னணியுடன் இந்தத் தமிழ்ப் படம் உருவாகி வருகிறது. கதை ,திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கி வருகிறார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்கு முன்பு ‘தமிழனானேன்’ என்றொரு படத்தை எடுத்திருந்தார். அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, தமிழனின் வீரக்கலையான வர்மக்கலையை எப்படிப் பயன்படுத்தி வெற்றி பெறுவது என்பதைக் காட்சிப்படுத்தியிருந்தார்.

இந்த’ 2323 ‘படத்தைப் பற்றி இயக்குநர் பேசும் போது,

“இது மூன்று நூற்றாண்டுகளில், அதாவது 300 ஆண்டுகளில் நடக்கும் கதை. இதை மூன்று பாகமாக எடுக்கிறேன். இப்படம் 2020 -ல் முதல் பாகத்தில் தொடங்குகிறது. கதை, மூன்றாம் பாகத்தில் 2323-ல் முடியும்.

இப்போது முதல் பாகத்தை உருவாக்கி வருகிறேன். இந்த 2020-ல் தொடங்கும் கதையை இப்போது உருவாக்கி வருகிறேன்.

நம் கண்ணுக்குத் தெரியாத பூதாகரமான பிரச்சினையாக உருவாகி வருகிறது குடிநீர்ப் பஞ்சம். மக்களின் அத்தியாவசிய தேவையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதன் எதிர்கால விஸ்வரூபத்தை நினைத்தால் பீதி ஏற்படுத்தும்.
இது வருங்காலத்தில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். இப்படிப்பட்ட சூழலில் இந்தத் தண்ணீருக்காக நடக்கும் அரசியலையும் திரைமறைவு வணிகத் திட்டங்களையும் சுயநல வியாபாரங்களையும் நினைத்தாலே இப்போதே அச்சம் தருகிறது. அவற்றைத் தோண்டினால் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகும்.

இந்தத் தண்ணீர்ப் பிரச்சினையை மையமாக வைத்துத்தான் இந்த முதல் பாகத்தை எடுத்து வருகிறேன் . ‘வெதர் கண்ட்ரோல்’ எனப்படும் காலநிலையைக் கையில் எடுத்து அதைக் கட்டுப்படுத்துகிறான் வில்லன்., மக்கள் வாழும் சூழ்நிலையையே கட்டுப் படுத்தும் அளவுக்கு அவன் வளர்கிறான் .அவனை எப்படிக் கதாநாயகன் முறியடிக்கிறான் என்பதுதான் கதை.

இதில் ஹீரோயிசத்துடன் தமிழனின் வீரக் கலையான குத்து வரிசையைப் பற்றி ஆழமாகவும் விரிவாகவும் சொல்லியிருக்கிறேன்.

நான் எப்பொழுது படம் எடுத்தாலும் தமிழரின் பெருமை களையும் வீரக்கலைகளையும் இடம்பெறச் செய்து அவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கம் உடையவன்.

இருபதே நாட்களில் இந்த படப்பிடிப்பை முடித்து விட்டோம். இப்போது மெருகேற்றும் பணிகளில், தொழில்நுட்ப.ப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

இப்படத்தில் நாயகனாக நான் நடித்து இருக்கிறேன். நாயகிகளாக சாத்விகா, கிரிஸ்டல் என இருவர் நடித்திருக்கிறார்கள். சாத்விகா கன்னடத்தில் இரு படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து இருக்கிறார். கிறிஸ்டல் பம்பாயில் பிறந்தவர். நியூயார்க்கில் வசிக்கிறார். அவர் ஹாலிவுட்டில் இரண்டு படங்களிலும் இந்தியில் இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார் .இவர்களுடன் ‘எமன்’ படப் புகழ் அருள் டி சங்கர் ,ராஜேந்திரன் கிருஷ்ணராஜ், ப்ரீத்தா, காசி,ஒரிசா பாலு ,டாக்டர் அபர்ணா, வினீஷ் ,ஆனந்த் ஆர். லிங்கா , சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு D.M.சந்துரு. இசை மகராஜ் தேவர், ஏ.ஆர்.தாமஸ், ஸ்ரீராம் ஆனந்த்.

வெற்றித் தமிழ் உருவாக்கம் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை மசனையன் மகேந்திர குமார் தயாரித்திருக்கிறார்.

மசாலா படத்தில் சலித்துப் போயிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தை தரும்,” என்று கூறுகிறார் இயக்குநர் சதிஷ் ராமகிருஷ்ணா

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.