திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசனை - குழப்பத்தில் கூட்டணி கட்சிகள்.!! | DMK 2021 | MK.Stalin

Prasanth Kishore Idea to DMK : சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில், தி.மு.கவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஒரு அரசல் புரசலான உறவுதான் நீடித்து வருகிறது.

வெளியில் ஏதோ அனைத்தும் முடிந்து கூட்டணி நன்றாக இருப்பது போல ஒர் தோற்றத்தை உருவாக்க நினைக்கிறது தி.மு.க.

பீஹார் சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெகு குறைவான இடங்களே கிடைத்துள்ளது. இதனால், காங்கிரஸின் செல்வாக்கு நாடு முழுவதும் குறைந்துள்ளதாக பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸிற்கு ஏன் அதிக இடங்களை வழங்க வேண்டும் என்று தி.மு.க யோசிக்கிறது. தி.மு.கவின் இந்த மரியாதை குறைவான செயல் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் சமீபத்தில் முடிந்த பீஹார் சட்ட மன்ற தேர்தல் முடிவுகளை மேற்கோள்காட்டி மிகவும் குறைவான இடங்களையே தி.மு.க காங்கிரஸ்க்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

“ஆட்சியில் பங்கு” என்ற கோஷமிட்டு வந்த காங்கிரஸ் கட்சி ,பீஹார் சட்ட மன்ற தேர்தலை அடுத்து, தற்போது தி.மு.க எத்தனை சீட்டுக்கள் கொடுத்தாலும் சரி என்று சொல்லி வேறு வழியின்றி கூட்டணியில் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் உரிய மரியாதை கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. வி.சி.க அவர்களது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் தி.மு.க அதனை நிராகரித்துள்ளதாக தகவலும் கசிந்துள்ளது. இது வி.சி.கவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வி.சி.க எடுத்த முன்னெடுப்புகளுக்கு தி.மு.க எந்தவித ஒத்துழைப்பையும் அளிக்காதது இதற்கு சான்று.

இவை ஒரு பக்கம் இருக்க, ம.தி.மு.கவும், இடது சாரிகளும் திமுகவுடன் இன்னமும் கூட்டணியில் தான் உள்ளதா என்றே சந்தேகப்படும் நிலை தான் உள்ளது.

மேலும், தி.மு.கவிற்கு வேலை பார்க்கும் பிரஷாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் தி.மு.க 200 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், கூட்டணி கட்சிகள் அனைத்தும் பெரிய அதிருப்தியில் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.