EPS Condolences to 13 Persons Families : எதிர்பாராத விபத்துகளில் சிக்கி பலியான 13 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிதி அளிப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கரைச்சுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி மெற்றில்டா என்பவரின் மகன் செல்வன் குரூஸ் காட்வின் என்பவர் பள்ளியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது, சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை பலிகொண்ட தீ விபத்து – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், சேர்ந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சுப்பையா என்பவரின் மகன் சிறுவன் குபேரன் என்பவர் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமத்தைச் சேர்ந்த திரு. இராஜேந்திரன் என்பவரின் மகள் செல்வி தர்ஷினி என்பவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

உதகை வட்டம், சோலூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சண்முகம் என்பவரின் மகள் செல்வி சோபனா என்பவர் அவருடைய வீட்டில் ஏற்பட்ட மின் விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், செங்கழநீர் பகுதியைச் சேர்ந்த திரு. பாஸ்கர் என்பவரின் மகன்கள் ஜெய்பிரசாந்த் மற்றும் குணால் ஆகிய சிறுவர்கள் இருவரும் குளத்து நீரில் மூழ்குவதை அறிந்த செல்வி ஷீலா என்பவர் அவர்களை காப்பாற்ற முற்பட்ட போது, மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், துண்டல்கழனி கிராமத்தைச் சேர்ந்த திருமதி சித்ரா, செல்வி சத்யா, செல்வி பூர்ணிமா மற்றும் செல்வி கலையரசி ஆகிய நான்கு நபர்கள் ஏரியில் துணி துவைக்கும் போது தவறி விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், தெரணி கிராமத்தைச் சேர்ந்த திரு. சுப்ரமணியன் என்பவரின் மகன் திரு. முருகேசன் என்பவர் கிணறு வெட்டும் போது மண் சரிந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கன்னியாகுமரி மாவட்டம், பைங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரு.வெள்ளைநாடார் என்பவரின் மகன் திரு. தேவராஜ் என்பவர் அம்சி குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டுவிட்டர் பக்கத்தில் மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்திலுள்ள காவல் குடியிருப்பில் ஆறாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.முருகசுந்தரம் என்பவரது மகள் செல்வி ஜோதிஸ்ரீ துர்கா இன்று தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த செல்வி.ஜோதிஸ்ரீ துர்கா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.