இனி சென்னை முழுவதும் மெட்ரோ சேவை - எங்கெங்கு எப்படி பயணிக்கலாம்? | Chennai Metro Train

Chennai Metro New Route Details : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னையின் இரண்டாம்கட்ட மெட்ரோ திட்டத்தை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தை அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சென்னைக்கான பொது போக்குவரத்து மேலும் மேம்படுத்தப்படும்.

சென்னையில் தற்போது பிரதான போக்குவரத்து சேவையாக இருக்கும் மெட்ரோ இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த வழித்தடம் கோயம்பேடு போன்ற பகுதிகளில் மேம்பால முறையிலும் ஆயிரம் விளக்கு போன்ற இடங்களில் சுரங்க முறையிலும் அமைந்துள்ளது. இந்த முதல்கட்ட மெட்ரோ திட்டத்தின் மற்றொரு விரிவாக்கமாக வண்ணாரப்பேட்டை – விம்கோ வரையிலான வழித்தடங்கள் மக்கள் சேவைக்கு விரைவில் கொண்டு வரப்படும். லட்சுமி கோயில், சுங்கச்சாவடி, அஜாக்ஸ் போன்ற இடங்களில் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ள நிலையில் இதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட தொய்வினால் இந்த பணிகள் தாமதமாகி வருகிறது. தற்போது இருக்கும் மெட்ரோ சேவைக்கு மக்களிடத்தில் அதிக வரவேற்பு உள்ளதால் மெட்ரோ ரயில் நிறுவனமானது இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமாகியுள்ளது.

இரண்டாம் கட்ட வழித்தடங்கள்:

இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் 119 கி.மீ. தூரம் கொண்ட மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. இதில், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட்டிற்கும் , சோழிங்கநல்லூர் வரையிலும் என இரண்டு வழித்தடங்கள் அமையவுள்ளது. மேலும், பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் இடையே ஒரு வழித்தடம் அமைகிறது.

இதற்கான திட்ட மதிப்பீடு 80 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. மத்திய அரசின் பரிந்துரைப்படி மெட்ரோ திட்டத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு 60 ஆயிரம் கோடி ரூபாயில் திட்டத்தை செயல்படுத்த மெட்ரோ நிர்வாகம் பணிகளை செய்து வருகிறது. இதற்கான நிதியில் 60 சதவிகித நிதியானது ஜப்பான் பன்னாட்டு நிறுவனம் மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனமிடமிருந்து பெறப்படும், மத்திய, மாநில அரசுகளிடமிருந்து தலா 20 சதவிகித நிதி பெறப்படும்.

இதில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் இடையிலான வழித்தடத்தில் மாதவரம் – கோயம்பேடு மற்றும் மாதவரம் – சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்கள் முன்னுரிமை கொண்ட முக்கிய வழித்தடமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று முடிக்கும் தருவாயில் உள்ளது.

புதிய மெட்ரோ பணிமனைகள்:

இரண்டாம் கட்ட மெட்ரோ சேவைக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மெட்ரோ நிர்வாகம் மும்முரமாய் ஈடுபட்டுள்ளது. முதற்கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் இல்லாமல் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அளவில் சிறியதாகவும் அதிநவீன வசதிகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வடசென்னை – தென்சென்னை வரையிலான போக்குவரத்து நெரிசலின்றி அமையும்.

கோயம்பேட்டில் ஏற்கனவே இருக்கும் மெட்ரோ ரயில் பணிமனைபோல் இரண்டாம்கட்ட மெட்ரோ திட்டத்திற்கு மாதவரம், சிறுசேரி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்கப்படவுள்ளன.