"ஒருமாத பரோலில் வெளியே வருகிறார் பேரறிவாளன்.. போலீஸார் பாதுகாப்பு"!

சென்னை : சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்படும் பேரறிவாளன், வேலூர் சிறையில் இருந்து காலை 9 மணிக்கு ஒருமாத பரோலில் வெளியே வருகிறார். இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோர் சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன், கடந்த 2017-ம் ஆண்டு தனது தந்தை மற்றும் சகோதரி உடல்நலம் சரியில்லாத காரணத்தால், அவருக்கு 2 மாத பரோல் வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து, தற்போது தந்தை குயில்தாசனின் உடல்நலம் குறித்து கவனிக்க, ஒரு மாதம் மீண்டும் பரோல் வழங்க தமிழக அரசுக்கு பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, பேரறிவாளன் தந்தை குயில்தாசனின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தண்டனை காலகட்டத்தில் பேரறிவாளனுக்கு வழங்கப்படும் 2-வது பரோல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்படும் பேரறிவாளன், வேலூர் சிறையில் இருந்து இன்று காலை 9 மணிக்கு ஒருமாத பரோலில் வெளியே வருகிறார். இதனால் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.